Friday 21 November 2014

அமெரிக்க உளவாளி

தொழில் முறையில் எடிட்டராக இருப்பதால், புத்தகங்கள் விஷயத்தில் நான் இழக்கும் விஷயங்கள் சில உண்டு. அவற்றுள் முக்கியமானது, தனை மறந்து ரசிப்பது.
ஒரு காலத்தில் எனக்குப் பிடித்த புத்தகங்களை பத்து முறை, இருபது முறையெல்லாம் திரும்பத் திரும்ப வாசித்திருக்கிறேன். இப்போது ஒரு புத்தகத்தை எடுத்தால் அதிகபட்சம் அரை மணி நேரம். எமகாதக சைஸ் புத்தகம் என்றால் அரைநாள். முடிந்தது. வார்த்தை வார்த்தையாக, வரி வரியாக அனுபவிப்பது எல்லாம் முடிவதே இல்லை. ஒரு வரி படிக்கும்போதே அடுத்த வரி மனத்துக்குள் ஓடத் தொடங்கிவிடுகிறது. ஒரு பேரா முடிந்தால் அடுத்தது இன்னமாதிரிதான் தொடங்கும் என்று உள்ளுணர்வு பல்பு எரிந்துவிடுகிறது. இரண்டு அல்லது மூன்று புத்தகங்கள், ஒரே ஆசிரியருடையதை வாசித்துவிட்டால் போதும். அவருடைய சொல் வங்கி என் தலைக்குள் ஏறிவிடுகிறது. இந்த இடத்தில் இவர் இன்ன வார்த்தைதான் போடப்போகிறார் என்று நாலைந்து வார்த்தைகளுக்கு முன்பே புரிந்துவிடுகிறது.
கதையல்லாத எழுத்தை எடிட் செய்வதற்காகப் படித்துக்கொண்டே இருப்பதன் விபரீதம் இது. என்னை வியப்பில் ஆழ்த்தும் எழுத்து என்று தட்சிணாயத்துக்கு ஒன்று, உத்தராயணத்துக்கு ஒன்று கூடக் கிடைக்கமாட்டேனென்கிறது. என் முன் தீர்மானங்களை உடைத்து நொறுக்கவல்ல ஒரு புத்தகத்துக்காக வருடம் முழுதும் படித்துக்கொண்டிருக்கிறேன். நமது எழுத்தாளர்கள் அத்தனை சாதாரணமானவர்களா? மகனே விட்டேனா பார் என்று எப்போதும் என்னைத்தான் ஓட ஓட விரட்டுகிறார்கள். சில சமயம் கிடைக்கிறது. பெரும்பாலும் சொதப்பல்தான்.
சென்ற வருடம் அவ்வாறு எனக்குக் கிடைத்த ஒரு அபூர்வமான புத்தகம் சீனாவைப் பற்றி பல்லவி ஐயர் எழுதிய ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. [சீனா: விலகும் திரை]
மொழிபெயர்ப்பு வாசிப்பது என்பதே ஒரு இம்சை. அதிகபட்சம் நல்ல மொழிபெயர்ப்புதான் இதில் சாத்தியம் என்பது என் தீர்மானமாக இருந்தது. இந்நூலின் மொழிபெயர்ப்பாளர் ராமன் ராஜா, ஆகச் சிறந்த மொழிபெயர்ப்பு என்பது எப்படி இருக்கும் என்பதை எனக்கு இதில் சொல்லிக்கொடுத்தார். திரும்பத் திரும்பப் படித்தேன். மூல நூலுடன் சேர்த்து வைத்தும் படித்துப் பார்த்தேன். தமிழில் அந்நூல் ஒரு ரகளை. இதில் சந்தேகமே இல்லை.
இந்த வருடம் எனக்கு அம்மாதிரி வாய்த்த ஒரு புத்தகம், அ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்க உளவாளி’.
ஈழத்தைச் சேர்ந்த முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவரான முத்துலிங்கம் ஓர் உலகம் சுற்றும் வாலிபர். அநேகமாக அண்டார்டிகா தவிர உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உத்தியோகம் பார்த்திருக்கிறார் என்று நினைக்கிறேன். விதவிதமான தேசங்கள், விதவிதமான மனிதர்கள், புதுப்புது அனுபவங்கள். போதாது? அவர் எழுத்தாளராக இருப்பதற்காகவே எம்பெருமான் வடிவமைத்துக் கொடுத்த வாழ்க்கை போலிருக்கிறது என்று எப்போதும் ரகசியமாகப் பொறாமை கொள்வேன். தனது ஒவ்வொரு அனுபவத்தையும் நினைவுகூர்ந்து அவர் எழுதும் கட்டுரைகள் ஒரு வகையில் தமிழுக்கு ஒரு முதல். இவை புனைவு – அபுனைவு இடைவெளியை அறவே அழித்துவிடக்கூடிய தன்மை கொண்டவை. தமது கட்டுரைகளின் உண்மையும் செழுமையும் ஆழமும் அடர்த்தியும் அப்படியே ஜொலிஜொலிக்க, புனைவின் வாசனையை அதற்குச் சேர்த்துவிடுவதில் முத்துலிங்கம் கைதேர்ந்தவர்.
ஓர் உதாரணம் சொல்லலாமா?
அவன் கூர்ந்து கவனித்தான். இது ஒரு சொற்றொடர். இதை நாம் எப்படிச் சொல்வோம்? முத்துலிங்கம் சொல்கிறார்: ‘ஒரு நிமிடத்தில் வெடிக்கப்போகும் வெடிகுண்டைச் செயலிழக்க வைப்பது எப்படி என்று ஒருவர் கூறுவதை உள்வாங்குவதைப் போல அவர் முழுக்கவனத்துடன் கேட்டார்.’
அனுபவங்கள் எல்லோருக்கும் வாய்ப்பது. அதைக் கலையாக்குவது எழுத்தாளரின் திறமை. கட்டுரை வடிவில் அதைச் சாத்தியமாக்குவது என்பது ரொம்ப சிரமமான காரியம். ஒரு கதையிலோ கவிதையிலோ வித்தை காட்டுவது பெரிய விஷயமல்ல. முலாம் பூசப்படாத உண்மைகளுக்கு மட்டுமே கட்டுரை வடிவத்தில் இடமுண்டு. அந்தச் சிறு டேபிளுக்குள் ஃபெடரர் மாதிரி டென்னிஸ் ஆடுபவர் முத்துலிங்கம்.
ஓர் அமெரிக்க உளவாளியைச் சந்திக்க வாய்ப்புக் கிடைக்கிறது ஆசிரியருக்கு. எத்தனை பெரிய வாய்ப்பு. அபூர்வமானதும்கூட. என்னென்னவோ பேசலாம், எத்தனையோ தகவல்கள், விவரங்களைக் கேட்டுப் பெறலாம். சி.ஐ.ஏவின் ஜாதகத்தையேகூட வாங்கிவிடலாம், சற்றுத் திறமையுடன் செயல்பட்டால். முத்துலிங்கத்துக்கு அறிமுகமாகிற சி.ஐ.ஏ., உளவாளி நன்கு பேசக்கூடியவர்தான். வாய்த்த சந்தர்ப்பமும் அழகானதே. ஒரு விருந்து. கையில் கோப்பையுடன் காவியமே பாடிவிட முடியும். ஆனாலும் அன்று நடக்கிற விஷயங்கள்!
‘அந்த விருந்துக்கு என்னிடமிருந்த ஆகத் திறமான உடுப்புத் தரித்து, ஆகத்திறமான சப்பாத்து அணிந்து, ஆகத்திறமான அமெரிக்க ஆங்கிலத்தை எடுத்துக்கொண்டு போனது எவ்வளவு வீண் என்று பட்டது. உளவாளியிடம் நான் எதையுமே பெற்றுக்கொள்ளவில்லை. ஒன்றுமே மிஞ்சவில்லை. மிஞ்சியது ஒரு சீனக் கவிதை மட்டுமே.’ என்ற வரிகளில் அமெரிக்க உளவாளியை மட்டுமல்ல, அ. முத்துலிங்கத்தையும் சேர்த்துப் புரிந்துகொண்டுவிட முடியும்.
தமிழில் யாருடனும் ஒப்பிட இயலாத அபூர்வமான தனித்துவம் பொருந்திய எழுத்து அவருடையது. திருவிழாவில் வேடிக்கை பார்க்கும் ஒரு சிறுவனின் மனோபாவத்துடன் வாழ்க்கையை அணுகி, தேர்வுத்தாள் திருத்தும் ஒரு கணக்கு வாத்தியாரின் கறார்த்தனத்துடன் சொற்களில் அதனைப் படம் பிடிக்கிறார். கட்டுரையானாலும் சரி, சிறுகதையானாலும் சரி. ஒரு வரி, ஒரு சொல் அநாவசியம் என்று நினைக்க முடிவதில்லை. ஓரிடத்திலும் குரல் உயர்த்தாத மிகப்பெரிய பக்குவம் முத்துலிங்கத்தின் ஒவ்வொரு படைப்பிலும் காணக்கிடைக்கிறது.
அவர் பேசவே பேசாத கதைகளிலும் சரி, அவர் மட்டுமே பேசும் கட்டுரைகளிலும் சரி. விவரிக்கப்படும் வாழ்க்கை அல்லது அதன் ஓர் அத்தியாயம் அதன் முழுப்பூரணத் தன்மையை வெகு இயல்பாக எய்திவிடுகின்றது. பாசாங்கில்லை, போலித்தனங்கள் இல்லை, தத்துவ தரிசனங்களை நோக்கிய தகிடுதத்தப் பயணங்கள் இல்லை. கடுமையான அனுபவங்களைத் தந்தாலும் வாழ்க்கை நேரடியானது. சரியாக உடைத்த தேங்காய் போன்றது. எனவே எழுத்தும் அவ்வண்ணமேதான் இருந்தாக வேண்டும். முத்துலிங்கத்தின் எழுத்தில் தொடர்புச் சிக்கல் என்ற ஒன்று எந்த இடத்திலும் இல்லை.
அப்புறம் அவரது நகைச்சுவை உணர்வு. முத்துலிங்கத்தின் நகைச்சுவையை உள்ளர்த்தங்கள் தேடாமல், நகைச்சுவைக்காகவே ரசிக்க முடிகிறது என்பது எனக்கு மிக முக்கியமான விஷயமாகப் படுகிறது.
கிட்டத்தட்ட முன்னூறு பக்கங்கள் வரக்கூடிய இந்தப் புத்தகத்தில் சுமார் இருபது, இருபத்தி ஐந்து வரிகளுக்குள் அடங்கும் ஒரு குட்டிக் காதல் கதை ஒன்றை முத்துலிங்கம் விவரித்திருக்கிறார். எல்லாம், நடந்த கதைதான். கதையை நான் இங்கே சொல்லப்போவதில்லை. ஆனால் ஒரே ஒரு அலங்காரச் சொல்கூட இல்லாமல் ஒரு முழுக் காதல் வாழ்க்கையை அத்தனைக் குறைவான வரிகளில், செய்தி வாசிப்பாளர் தொனியில் விவரித்துவிட்டு, இரண்டு நாள் தூக்கமில்லாமல் அல்லாட வைப்பதென்பது சத்தியமாக வேறு எந்த எழுத்தாளருக்கும் சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன்.
நீண்ட நெடுங்காலத்துக்குப் பிறகு ஓர் எடிட்டராக என்னை மறந்து, வாசகனாக, ரசிகனாகப் படிக்க வைத்த புத்தகம் இது.
நன்றி 
பா.ராகவன் அவர்களுக்கு

இணையத்தில் வாங்க 
http://www.udumalai.com/life-history-books.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment