Wednesday 19 November 2014

சுஜாதாவின் நாடகங்கள்

சுஜாதாவின் நாடகங்கள் - ஆர்.வி

சுஜாதாவின் சில பல நாடகங்களை சமீபத்தில் படித்தேன்.

அவரது ட்ரேட்மார்க் பலங்கள் பலவும் இவற்றில் தெரிகின்றன. ஒரு சில வாக்கியங்களில் ஒரு மனிதனின் காரக்டரையே புரிய வைத்துவிடுவது, மெல்லிய நகைச்சுவை, நல்ல பாத்திரப் படைப்பு, கூர்மையான வசனங்கள், கொஞ்சம் துள்ளல் உள்ள கதைப்போக்கு எல்லாம் இருக்கின்றன. தமிழில் இவரை விட சிறப்பாக யாரும் நாடகம் எழுதியதாக எனக்குத் தெரியவில்லை.

ஆனால் சுஜாதா இப்சனோ பெர்னார்ட் ஷாவோ இல்லை. அவருடைய நாடகங்களில் பொதுவாக பெரிய தரிசனங்கள் இல்லை. நியாய அநியாயக் கேள்விகள் இல்லை. அனேகமாக எல்லா நாடகங்களிலும் என்ன நடக்கும் என்று தெரிகிறது. சபா சர்க்யூட்டுக்குப் புரிய வேண்டும் என்ற constraint இருந்திருக்கிறது. அவருடைய பலம் என்பது புரட்சிகரமான கதை, நம்மை உலுக்கக் கூடிய ஒரு கேள்வி, மனிதனின் குணத்தை உரித்து உண்மையாகக் காட்டுவது போன்றவை அல்ல. “சம்பிரதாயக் கதைகளில்” சின்னச் சின்ன நகாசு வேலைகள், அதிகமான நம்பகத்தன்மை ஆகியவைதான்.

சின்னச் சின்ன ஓரங்க நாடகங்களில்தான் அவரது கலை உணர்வு உண்மையாக மிளிர்கிறது. சுஜாதா மாதிரி எழுத்தாளருக்கெல்லாம் சின்ன கான்வாஸ்தான் உத்தமம். அவரால் பாத்திரங்களின் தன்மையை சுருக்கமாக நாலு வரி வசனத்தில் காட்டிவிட முடியும். சின்னதாகக் கோடு போட்டே பெரிய கதைகளைச் சொல்லிவிட முடியும். அதுதான் அவரது ஸ்பெஷாலிடி. மனிதர்களை கூர்மையாக அவதானித்து ஓரிரு குணாதிசயத்தைக் காட்டி நம்மை மிச்சத்தை யூகித்துக் கொள்ள விட்டுவிடுவார். உதாரணமாக “மாறுதலில்” வரும் கொஞ்சம் வயதான நாடகம் பார்ப்பவர். அவர் அனேகமாக அதிகாரம் செலுத்த கொஞ்சம் வாய்ப்பு உள்ள அரசு அலுவலராக இருக்க வேண்டும். அவர் எப்படிப்பட்டவர், பூர்ணம் அவரை எப்படி சித்தரிப்பார் என்றெல்லாம் கண் முன்னால் ஓடுகின்றன! நாடக சூழலையும் – அது சின்ன ஹோட்டலாக இருக்கட்டும், ஒரு ரயிலாக இருக்கட்டும் அவரால் கொண்டுவந்து விட முடியும். பிரயாணம், வந்தவன், சரளா, வாசல் போன்றவை ரத்தினங்கள். வாசல் போன்ற குறுநாடகங்களில் ஒரு அற்புதமான joie de vivre தெரிகிறது. இது சாத்தியப்படுவது மிக அபூர்வம். எனக்குத் தெரிந்து Arms and the Man, மற்றும் The Importance of Being Earnest இரண்டிலும்தான் இது நடந்திருக்கிறது.

ஆனால் இந்த நாடகங்கள் படிக்க இல்லை நடிப்பதற்கு எழுதப்பட்டவை. நாடகமாகப் பார்க்கும்போது என்ன நடக்கும் என்று தெரிவது பெரிய குறையாகத் தெரியாது என்று நினைக்கிறேன். அநேக நாடகங்களில் நடிப்பதற்கு நல்ல ஸ்கோப் உள்ள பாத்திரம் ஒன்றாவது இருக்கிறது. அதுவும் பூர்ணம் விஸ்வநாதன்-சுஜாதா காம்பினேஷன் நன்றாக வொர்க் அவுட் ஆகி இருக்கும். அதுவும் பிராமணப் பின்புலம் உள்ள நாடகமாக இருந்தால் இன்னும் விசேஷம். ஆனால் நான் பார்த்த ஊஞ்சல் டிவிடியில் பூர்ணம் சொதப்பிவிட்டார்.

அவரது “பெரிய” நாடகங்களில் நான் சிறந்ததாகக் கருதுவது ஊஞ்சல். ஒரு காலத்தில் ஜீனியஸ் என்பதை எப்படி எதிர்கொள்வது? சச்சின் டெண்டுல்கருக்கும் விஸ்வநாதன் ஆனந்துக்கும் இனி மேல் என்ன? புகழும் பணமும் கௌரவமும் சுயத்தின் மீது இருக்கும் பெருமிதமும் கொஞ்சம் கொஞ்சமாக தகர்ந்து கொண்டிருப்பதைப் எப்படி பார்த்துக் கொண்டிருப்பது? எதிர்காலத்தில் சாதனைகள் இல்லை, இருந்தாலும் நேற்றைய சாதனைகளின் தரத்தை இனி மேல் எட்ட முடியாது என்பதை ஏற்றுக் கொள்வது சுலபம் இல்லை. அந்த வீழ்ச்சியை, வாழ்வின் தேவைகளுக்காக சமரசம் செய்து கொள்வதை (பஸ் டிக்கெட் போடுவது குரூரமான காட்சி), நேற்றைய பெருமித நினைவுகளிலேயே வாழ்வதை சுஜாதா மிகவும் பிரமாதமாகக் கொண்டு வந்திருப்பார்.

அதற்கு அடுத்தப்படியாக சொல்லக் கூடியது டாக்டர் நரேந்திரன். ராஷோமான் டெக்னிக்குக்காகவே பார்க்கலாம். படிப்பதை விட பார்ப்பது உத்தமம். இந்த மாதிரி பாத்திரங்களெல்லாம் பூர்ணம் விஸ்வநாதனுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி.

கடவுள் வந்திருந்தார் ஒரு லைட்டான நாடகம். ஒரு ரிடையர் ஆன மத்திய வர்க்கக் குடும்பத் தலைவர் வீட்டுக்கு வேற்று கிரகவாசி வருகிறான். அவர் கண்ணுக்கு மட்டும்தான் தெரிகிறான். அதனால் விளையும் குழப்பங்கள்தான் நாடகம். நகைச்சுவைதான் நோக்கம். ஆனால் எஸ்.வி. சேகர் மாதிரி ஜோக் தோரணம் இல்லை. இது உண்மையிலேயே நாடகம், வேறு லெவல். பார்ப்பதற்கு நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். அதுவும் அந்த ரிடையர் ஆன பாத்திரம் பூர்ணத்துக்காகவே எழுதப்பட்டது என்று நினைக்கிறேன். சமீபத்தில் பாரதி மணி நடித்தது நன்றாக இருந்தது என்று கேள்வி.

அடிமைகளில் அவர் மனிதர்களை உரித்துக் காட்ட முயற்சித்திருக்கிறார். யூகிக்க முடிந்தாலும் படிக்கலாம். தன் பணத்தால் குடும்பத்தினரை அடிமையாக வைத்திருக்கும் பெரிய மனிதர் இறக்கிறார், முன்னாள் அடிமை அவர் பணத்துக்கு வாரிசு. என்ன நடக்கும் என்று சுலபமாக யூகிக்கலாம். இதிலும் பெரிய மனிதர் பாத்திரம் பூர்ணத்துக்காகத்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

இவை இரண்டையும் நான் அடுத்த லெவலில் வைப்பேன்.

பாரதி இருந்த வீடும் பூர்ணத்துக்காகவே எழுதப்பட்டதோ என்று தோன்றுகிறது. இன்று ஏறக்குறைய cliche ஆகிவிட்ட கேள்விதான் – வயதான, பணம் இல்லாத அப்பா இரு மகன்களுக்கிடையே பந்தாடப்படுகிறார், எப்படி சமாளிப்பார்? இதையும் பார்ப்பது பெட்டராக இருக்கும். நல்ல நடிகர்களால் இந்த நாடகத்துக்கு உயிர் தர முடியும். அன்புள்ள அப்பாவும் அதே வயதான அப்பா கேள்வியைத்தான் இன்னொரு குடும்பப் பின்னணியில் பார்க்கிறது. இதையும் பார்ப்பதுதான் பெட்டராக இருக்கும்.

சிங்கமய்யங்கார் பேரனில் கதை சுகமில்லை. முடிச்சும் சரி, தீர்வும் சரி, காலேஜ் நாடகம் போல இருக்கிறது. பெரிய கான்வாஸ் என்றால் நிறைய விவரங்கள் வேண்டும், கொஞ்சம் சொதப்பிவிட்டார்.

இந்த 7 நாடகங்களைத் தவிர அவர் 15 குறுநாடகங்கள் எழுதி இருக்கிறார். அவற்றில் பிரயாணம், வந்தவன், சரளா, வாசல் போன்றவை மாணிக்கங்கள்.

பிரயாணம் எனக்குப் பிடித்த நாடகங்களில் ஒன்று. நடிப்பதற்கு பிரமாதமான ஸ்கோப் உள்ள நாடகம். அந்த கணபதி ஐயரும், பிக்பாக்கெட்டும், சைட் அடிக்கும் கல்லூரி மாணவனும் அருமையான பாத்திரங்கள். கதை என்று ஒன்றும் பிரமாதமாக இல்லை, ஆனால் அது முக்கியமே இல்லை. ஒரு microcosm சித்தரிக்கப்படுகிறது, தத்ரூபமாக.

வந்தவன் எனக்குப் பிடித்த இன்னொரு நாடகம். இதிலும் அந்த ஹோட்டல் ஐயர், ஆஹா! பசி என்று வந்தவன் கடைசியில் பேசும் வசனமும் அருமையானது. இதைப் பற்றி நான் மதிப்பீடு எழுதும் நேரத்தில் நீங்கள் படித்தே விடலாம், படியுங்கள்! ஓரங்க நாடகம்தான், முடிந்தால் நடித்தும் பாருங்கள்!

சரளா நான் சிறு வயதில் படித்து ரசித்த நாடகங்களில் ஒன்று. கல்கியோடு இலவச இணைப்பாக வந்ததை ரொம்ப நாள் பத்திரமாக வைத்திருந்தேன். சுஜாதா டென்னசி வில்லியம்ஸ் ரேஞ்சில் எழுதுகிறார் என்று நினைத்தது இதைப் படித்தபோதுதான். சமீபத்தில் அவரது நாடகங்களின் தொகுப்பைப் படித்தபோது இது எட்வர்ட் ஆலன் பேக்கர் என்பவர் எழுதிய Dolores என்ற நாடகத்தின் தழுவல் என்று குறிப்பிட்டிருந்தார்.

வாசல் ஒரு அபாரமான நாடகம். எல்லாருக்கும் பிடித்த மாமா, (அப்பாவுக்கு மட்டும் பிடிக்காது) வீட்டுக்கு வந்து ஒரு ஆட்டம் போட்டுவிட்டுப் போவதை மிக அற்புதமாக தத்ரூபமாக சித்தரித்திருப்பார்.

கதை கேளு பெண்ணே, கதை கேளு! மற்றும் பெட்டி நாடகங்களின் முக்கியத்துவம் பாத்திரங்கள்தான். சும்மா நாலு வரியில் பெரிய சித்திரமே தீட்டிவிடுகிறார்.

முதல் நாடகம் (ஒரு கொலை) மற்றும் மாறுதல் இரண்டும் உத்திகளுக்காக எழுதப்பட்ட நாடகங்கள். பார்க்க நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

முயல் என்ற நாடகமும் Rabbit Trap என்ற நாடகத்தின் தழுவலாம். படிக்கலாம். பார்ப்பது இன்னும் பெட்டராக இருக்கும்.

கிருஷ்ணா! கிருஷ்ணா! இயந்திரமயமாக்குதலின், தொழில் முன்னேற்றத்தின் விளைவுகளைக் காட்டுகிறது. இன்று இது ஒரு cliche.

சேகர் அவருடைய favorite தீம் ஆகிய robot. பார்க்கும்போது எல்லாரும் சிரிப்பார்கள், laugh track மாதிரி இருக்கும், நாமும் கொஞ்சம் சிரித்து வைப்போம் என்று நினைக்கிறேன்.ஆகாயம் இன்னொரு SF என்று முயற்சி. சரியாக வரவில்லை.

மறுமணம் சில ஸ்டாக் கேரக்டர்களை – ஆண்பிள்ளை வேண்டும் என்று துடிக்கும் கணவன், சோகத்திலிருக்கும் மனைவி, “புரட்சிகரமான” வழி காட்டும் டாக்டர் – காட்டுகிறது.

மந்திரவாதி, இடையன் மகள் போன்றவற்றின் பாயின்ட் என்ன என்று எனக்குப் புரியவில்லை.

சுருக்கமாகச் சொல்வதென்றால் நாடகங்களில் சுஜாதா உண்மையான இலக்கியம் படைக்க முயன்றிருக்கிறார். பல முறை வெற்றியும் பெற்றிருக்கிறார். அவரது எழுத்துகளில் இந்த நாடகங்கள் குறைந்த சதவிகிதமாக இருக்கலாம். (7 “பெரிய நாடகங்கள், 15 “சின்ன” நாடகங்கள்”) ஆனால் அவர் வெறும் பொழுதுபோக்கு எழுத்தாளர் அல்ல என்றூ நிறுவுவதில் இவற்றுக்குப் பெரும் பங்குண்டு.

இணையத்தில் ஆர்டர் செய்ய: http://www.udumalai.com/sujathivin-nadagangal.htm

தொலைபேசியில் வாங்க: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment