Friday 14 November 2014

உயிர்மொழி

தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, பேரன், பேத்தி… என சங்கிலித்தொடர்போல வாழும் மனித உறவுகள் அனைத்தும் ரத்த சம்பந்தமான உறவு என்பதால் இவர்களிடையே பாசப் பிணைப்பும் இயற்கையாக அமைந்துவிடும். கூடிவாழ்தல், விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை, பகிர்ந்து அளிக்கும் தன்மை போன்ற குணங்களும் வழிவழியாக அமைந்துவிடும். ஆனால், அனைத்து உறவுகளின் மீதும் ஒருவருக்குப் பாசம் வந்துவிடாது. அதிலும் ஆண்-பெண் உறவு என்பது மிகவும் சிக்கல் வாய்ந்தது! கணவன்-மனைவி என்ற உறவுச்சங்கிலி இடையில் ஏற்படுவது. திருமணம் என்ற பாலம் மட்டுமே இவர்களை இணைப்பதால், அந்தஸ்து, வேலை, பொருளாதாரம், உணவுமுறை, உடை, பிறந்தவீட்டுப் பாசம் போன்ற காரணிகளால் குடும்பத்தில் சிக்கல்கள் எழும்போது அந்த உறவுப்பாலம் உடையவும் வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது. ‘ஆண்தான் உயர்ந்தவன்… பெண்தான் உயர்ந்தவள்’ என்கிற ஈகோ உருவாகி, இருவருக்கும் இடையில் அன்பு நழுவும் நேரத்தில் பிரிவு என்பது நிரந்தரமாகிவிடுகிறது! இப்படி, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பிரிவு ஏன் வருகிறது? இரு இனத்துக்கும் இடையே போட்டி தொடர்ந்து கொண்டே இருக்க என்ன காரணம்? ஆண்கள் மட்டும் தனித்தோ, பெண்கள் மட்டும் தனித்தோ இந்த உலகை ஆளமுடியுமா? -மனித இனம் தழைக்க, இதுபோன்ற கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஆண்-பெண் உறவு மேம்படவும், திருமண பந்தம் நீடிக்கவும் தேவையான வழிமுறைகளைக் காண, பல துறைகளைச் சார்ந்த வல்லுனர்கள் தொடர்ந்து ஆராய்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே இருக்கும் ஆண்&பெண் உறவுச் சிக்கலை விஞ்ஞான ரீதியாக அலசி ஆராய்ந்து இந்த நூலில் எழுதியிருக்கிறார், உளநலவியல் நிபுணர் டாக்டர் ஷாலினி. அடிமைத் தளத்திலிருந்து விடுபடவும், தங்களுக்கான பாதுகாப்பைத் தேடிக்கொள்ளவும், கலவி வாழ்க்கையில் வீரியம்மிக்க நல்ல வாரிசுகளைக் கருவாக்கவும் ஆதிகாலத்திலிருந்தே பெண் இனம் எப்படி பரிணாமவளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதைத் தெளிவாக விளக்குகிறது இந்த நூல்.

No comments:

Post a Comment