Friday 14 November 2014

அந்நியப்படும் கடல்

சாதாரண பிக்பாக்கெட்டை பின்மண்டையில் தட்டி தரதரவென்று இழுத்துச் செல்லும் போலீசு ஒரு மாவட்டத்தில் மலைகளையே விழுங்கி ஏப்பம் விட்ட பி.ஆர்.பியை பயபக்தியோடு கோர்ட்டுக்கு இழுத்து வருவதைத் தொலைக்காட்சிகளில் பார்த்தவர்கள் திகைத்துப் போயிருப்பார்கள். இது எப்படிச் சாத்தியமாகிறது என்று குழம்பிப் போயிருப்பார்கள். ஆனால், இது பி.ஆர்.பிக்களின் காலம் – ஏனெனில், இது தரகர்களின் பொற்காலம். நிலம், நீர், காற்று,ஆகாயம் என்று இயற்கை மக்களுக்கு வழங்கியிருக்கும் கொடைகள் ஒவ்வொன்றையும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்குக் கூறு கட்டிப் படையல் வைத்துக் கொண்டிருக்கும் தரகர்களின் கையில் தான் இன்றைக்கு ஆட்சியதிகாரம் குவிந்து கிடக்கிறது. அந்த வகையில், தொன்மையான தமிழகக் கடல் பழங்குடிகள் மீதான அறுபதாண்டு கால அரசின் கொள்கை ரீதியிலான வன்முறைகளை விவரிக்கிறது வறீதையாவின் இச்சிறு நூல்.

தங்கள் வாழ்க்கையையே பணயமாக வைத்து நம் நாவின் ருசிக்காக மீன்களைப் பரிசளிக்கும் இந்தத் தொல்குடிகளுக்கு கடலில் என்ன நேர்ந்ததோ அதே தான் நமக்கும் நிலத்தில் நேர்ந்து வருகிறது. அவர்களின் எதிரிகளும் நமது எதிரிகளும் வேறு வேறு அல்ல. அவர்களை இனம் கண்டு புரிந்து கொண்டால் தான் முறியடிக்க வேண்டிய அவசியத்தை நாம் உணர்ந்து கொள்ள முடியும். அந்த வகையில் நாம் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.

No comments:

Post a Comment