Wednesday 26 November 2014

சாதியும் நானும் – பெருமாள் முருகன்

அண்மையில் ஜெயமோகன் எழுதிய, ‘நேருக்கு நேராகப் பேசும்போது‘  கட்டுரை படித்தபோது பெருமாள் முருகன் தொகுத்து வெளிவந்த ‘சாதியும் நானும்’ கட்டுரை நூல் நினைவுக்கு வந்தது. இந்த நூல் பற்றி முதலிலேயே எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன், ஆனால் ஜெயமோகன் எழுதிய கட்டுரையின் உள்ளடக்கத்தைப் படித்தபின்தான் இதைச் செய்வதற்கான உந்துதல் கிடைத்திருக்கிறது.

‘சாதியும் நானும்’ தொகுப்பு நூலை ஒரு புதுமையான, துணிச்சலான முயற்சி என்று சொல்லலாம், பெருமாள் முருகனையும் சேர்த்து 32 பேர் தங்கள் சாதியையும் இளவயதிலிருந்து அது தங்கள் வாழ்வில் தங்களை பாதித்த விதத்தையும் பதிவு செய்திருக்கிறார்கள்.
பெரும்பாலும் தலித் மற்றும் மிகவும் பின்தங்கிய (சேவை) சாதிகளில் பிறந்தவர்களே கட்டுரையாளர்களில் அதிகம். இவர்களில் நிறைய பேர் கல்வித்துறையில் பணியாற்றுபவர்கள். பெரும்பாலும் 1970களிலும் 80களிலும் பிறந்தவர்கள். 60களில் பிறந்தவர்கள் பெருமாள் முருகனோடு சேர்ந்து மிகச் சிலரே. ஒரே ஒரு பிராமணர்தான் இதில் உண்டு, அதில் ஒன்றும் வியப்பில்லை. மூன்றே மூன்று பெண் கட்டுரையாளர்கள்தான் இந்தத் தொகுப்பில் உள்ளனர் என்பதிலும் வியப்பதற்கு எதுவும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

சாதி தமிழ்நாட்டில் (இந்தியாவிலுமே) ஒரு proverbial elephant in the room. எல்லார் கண்ணுக்கும் தெரியும், ஆனால் யாரும் வெளிப்படையாக பேச விரும்புவதில்லை. ஒரு வகையில் டாஸ்மாக்கும் சாதியும் ஒன்று என்றும் சொல்லலாம். இது இருப்பதில் யாருக்கும் விருப்பமில்லை என்று பொதுவாகத் தோன்றும். ஆனாலும் இது இல்லாமல் இருக்க முடியாது என்பதுபோல் சாதி தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கின்றது. இந்தச் சூழலில் பெருமாள் முருகன் எழுதியும் தொகுத்தும் பதிப்பிக்கப்பட்டிருக்கும் ‘சாதியும் நானும்’, சமீபத்தில் வெளிவந்த முக்கியமான நூல். சாதி தங்கள் வாழ்வில் ஏற்படுத்திய பாதிப்புகளைப் பற்றி அந்தந்த சாதிகளைச் சார்ந்தவர்களே வெளிப்படையாக பேசும் கட்டுரைகள் அடங்கிய நூல் இது.
இந்தத் தொகுப்பில் உதவி செய்தவர்களில் இருவரான பி எழிலரசி மற்றும் கு. சின்னதுரை ஆகியோரின் கட்டுரைகள் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. இதிலுள்ள மற்றொரு பெண் கட்டுரையாளரான வளர்மதி அவர்களின் கட்டுரையும் முக்கியமானதொன்று என்றாலும் இந்தத் தொகுப்பில் எழிலரசி அவர்களின் கட்டுரையே என்னை மிகவும் கவர்ந்தது. குயவர் என்றும் வேளார் என்றும், குலாலர் என்றும் அழைக்கப்படும் வகுப்பைச் சார்ந்த அவரது அனுபவக் கட்டுரை அபூர்வமான சுயசாதி விமர்சனத்தைக் கொண்டது. சுய அனுபவத்தைத் தாண்டி, தமிழ் சமூகத்தில் சாதி அளிக்கும் அதிகாரத்தைக் கைவிட மறுக்கும் இடைநிலைச் சாதிகளின் நிலையை நன்றாகவே கணித்து அரசியல் சரிநிலைகளைத் தாண்டி தமிழகத்தில் நிலவும் சாதிய யதார்த்தத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
“சாதியப் படிநிலைகளில்  இடைநிலையில் உள்ளவர்கள்தான் தங்கள் சாதி குறித்த அதீதப் பற்றும் ஒடுக்கப்பட்ட சாதியின் மீது துவேஷமும் உடையவர்களாக இருக்கிறார்கள். மேல் சாதியினரைப் போல் தங்களை பாவித்துக் கொண்டும் அவர்களின் பழக்கவழக்கங்களைப் பரப்பத் துணை புரிபவர்களாகவும் செயல்படுகின்றனர். மேல்நிலை மக்களின் மனநிலைக்குச் செயல் வடிவம் கொடுப்பவர்கள் போன்றும் மக்களிடையே அதீத பிம்பத்தை உயர்த்திக்கொள்ளவும்,தலித் மக்களிடையே அதீதச் சாதி ஒடுக்குமுறைகளைக் கையாளுகின்றனர். எல்லாம் ஒண்ணுதான் என்று தலித் மக்கள் கிளம்பிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை மனோபாவமாகக்கூட இதைப் பார்க்கலாம். சாதி முறைகளில் தலித் மக்களோடு நெருங்கி வாழ்கின்ற சூழல் உடையவர்கள்தான் அவர்களை வெகுவாகப் புறக்கணித்து பல நிலைகளில் துன்புறுத்தவும் செய்கின்றனர். அவ்வகையில் குயவர்களையும் அப்படிப்  பார்க்கலாம்,” என்று தன் சாதியை அரிதான ஒரு சுய விமர்சனப் பார்வையோடு விமரிசிக்கிறார் எழிலரசி.
இது தவிர, இன்னொரு குறிப்பிடத்தக்க கட்டுரை கு. சின்னதுரை எழுதியது. இந்தக் கட்டுரை இன்னொருவரின் சாதியைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் தமிழ் மக்களிடையே எவ்வளவு ஆழமாக வேரூன்றியிருக்கிறது  என்பதையும் இன்னமும் தலித் சாதியினர் வெளிப்படையாக தங்கள் சாதியை சொல்லிக்கொள்ள முடியாத நிலை இருப்பதையும் காட்டுகிறது. ஒரு பேருந்துப் பிரயாணத்தின்போது அவருக்கு நேர்ந்த அனுபவத்தை ஒரு சிறுகதையின் சுவாரசியத்தோடு விவரித்திருக்கிறார் சின்னதுரை.
தமிழ்நாட்டில் மிக அதிகமாக வலைப்பக்கங்களிலும் சிற்றிதழ்களிலும் காணக் கிடைக்கும் பார்ப்பன எதிர்ப்பு அதிக அளவில் இந்தத் தொகுப்பில் பதிவு செய்யப்படவில்லை என்பது வியப்பாக இருக்கிறது. அதிக அளவு என்று சொல்வதுகூட தவறு 30க்கும் மேற்பட்ட கட்டுரைகளில் ஒரே ஒரு கட்டுரைதான் சாதியமைப்பைப் பார்ப்பனரோடு தொடர்புபடுத்தி எழுதப்பட்டுள்ளது.  தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே அதிகமும் கட்டுரையாளர்கள் என்பதால் ஆதிக்க சாதியினர் அநேகமாக கவுண்டர்கள் அல்லது வன்னியர்களாகவே  இருக்கிறார்கள். இவர்களைத்தவிர  தமிழகத்தின் மேற்குப் பகுதிகளின்  தெலுங்கு பேசும் ஆதிக்க சாதிகளும் அடையாளப் படுத்தப்பட்டுள்ளார்கள். இந்தக் கட்டுரையாளர்களின் வசிப்பிடங்களான கிராமங்களில் அநேகமாக பார்ப்பனரே இல்லை என்றுகூட இக்கட்டுரைகளைக் கொண்டு சொல்லிவிடலாம். இந்த நிலை பெருமாள் முருகனின் நாவல்களிலும் சிறுகதைகளிலும்கூட காணக் கிடைக்கும் ஒன்று. இந்த நூலுடன் சேர்த்து அவரது சமீப நாவல்களான ஆளண்டாப் பட்சியையும் பூக்குழியையும் படித்தால் தமிழகத்தின் சாதியமைப்பைக் குறித்தும் சாதிகள் கிளை பிரிந்து புது சாதிகள் உருவாகும் விதம் குறித்தும் ஒரு மாறுதலான சித்திரம் கிடைக்கும்.
பிராமண வகுப்பைச் சார்ந்த ஒருவரின் கட்டுரை இதில் இடம் பெற்றுள்ளது. அது இன்னமும்கூட விரிவானதாக இருந்திருக்கலாம். என் அனுபவத்தில் பிராமண அடையாளம் என்பது இன்று  இருமுனையும் கூரான கத்தியைப் போன்றது. ஆனால் இந்தக் கட்டுரை அந்த அடையாளத்தின் ஒரு பக்கத்தை (பாதிப்பு ஏற்படுத்தும் பக்கத்தை) மட்டுமே பேசியிருக்கிறது. பிற ஆதிக்கச் சாதியினரின் அனுபவப் பதிவுகளும் குறைவுதான். அவர்களின் கட்டுரைகளிலும்  தங்களுக்கு கீழுள்ள படிநிலையில் உள்ளவர்களை தாங்கள் நடத்தும் விதம் குறித்த குற்றவுணர்வு அவ்வளவு அழுத்தமாக இல்லை.
பெருமாள் முருகனின் கட்டுரை உட்பட, இந்தக் கட்டுரைகளில் தமிழகத்தில் சாதியமைப்பின் உருவாக்கம், அதன் நீடித்த தொடர்ச்சி ஆகியன குறித்து ஆழமான விசாரணைகள் ஏதும் இல்லை என்பது இந்நூலின் முக்கியமான குறை. அதிலும் குறிப்பாக, கிராமப்புர சமூக அமைப்பில் முழுமையான மேலாதிக்கம் செலுத்தும் சாதியினர் கல்வி, அரசு வேலைவாய்ப்பு என்று வரும்போது தங்களை பிற்படுத்தப்பட்டவர்கள் என்றும்  மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்றும் வகைப்படுத்திக்கொண்டு பெற்றுக் கொள்ளும் இரட்டை அதிகார வாய்ப்பு குறித்த கேள்விகளே இந்தக் கட்டுரைகளில் இல்லை (இடைநிலைச் சாதிகளின் இந்த இரட்டை அதிகார வாய்ப்பு குறித்து முன்பு காலச்சுவடில் ரவிக்குமாரின் ஒரு நல்ல கட்டுரை வெளிவந்தது. இப்போது அவர் அம்மாதிரி கட்டுரைகள் எழுதும் நிலையில் இல்லை). தலித்துகளும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களும்கூட அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை தங்கள் உயர்வுக்கு ஒரு காரணமாக இருப்பது குறித்து இன்னமும் வெளிப்படையாக பதிவு செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
ஆனால் மிகவும் பிற்படுத்தப்பட்ட சேவைச் சாதிகளைச் சார்ந்த  வண்ணார், குயவர், நாவிதர் போன்ற சாதிகளைச் சேர்ந்தவர்களும் தலித்துகளும் தங்கள் சாதி அடையாளங்களை வெளிப்படையாகப் பதிவு செய்து அதனால் தாங்கள் அடைந்த துயர்களை முன்வைக்கும் விதமாக இந்த நூல் வெளிவந்திருப்பது ஒரு முக்கியமான நிகழ்வேயாகும். அதுவும் பெரும்பாலான கட்டுரையாளர்கள் சமூக நீதியை அடைவதில் வெற்றி பெற்ற திராவிட இயக்கங்களின் ஆட்சிகளின்போது, 70களுக்குப் பின்னும் 80களிலும், பிறந்தவர்கள் என்று எண்ணும்போது சாதி ஒழிப்பில் தமிழகம் அடைந்துள்ள “முன்னேற்றம்” சிந்திக்க வைக்கிறது.
மனிதர்கள் குழு அடையாளங்களை துறப்பது அவ்வளவு எளிதானதல்ல என்றே இந்நூல் முடிவில் உணர்த்துகிறது, மானுடவியலாளர் டெஸ்மாண்ட் மாரிஸ், சமூகம் எவ்வளவு நவீனம் அடைந்தாலும் ஒரு தனி மனிதனின் சுற்றம் என்பது அதிகம் போனால் 300 பேருக்கு மேல் போகாது என்றும் இது அவன் இனக்குழு வாழ்விலிருந்து தொடர்வது என்றும் குறிப்பிடுவார். இந்த இனக்குழு வாழ்வு இருபதாம் நூற்றாண்டிலும் மிஞ்சியிருப்பதே இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ள சாதி என்று கருதுவதற்கு நிறைய இடமிருக்கிறது.  இந்திய சமூகச் சூழலில் அந்த 300 பேரில் முக்காலே மூணு வீசம் பேர் சுயசாதியினராகத்தான் இருக்க முடியும்.
இன்றைய நிகழ்வுகளைப் பார்க்கும்போது நவீனத்துவம் சாதிகளை ஒழிக்கும் என்று இன்னமும் யாரும் நம்புவது இல்லை என்றே தோன்றுகிறது என்றால் இந்நூல் அதனை மேலும் உறுதிப்படுத்துகிறது. ஒரு மேம்போக்கான குற்றவுணர்வு இருப்பது போல் பட்டாலும் எந்தச் சாதியினருமே தங்கள் சாதி அடையாளத்தைத் துறப்பதற்கு தயாராக இல்லை. மேலும், இன்று அடையாள அரசியலும், சாதியை அடிப்படையாகக் கொண்ட இட ஒதுக்கீட்டு முறையும் ஸ்திரப்பட்டுவிட்ட நிலையில், சாதி அடையாளங்களைப் பேணுவதே ஒரு தனிமனிதனுக்கு லாபமாக இருக்கிறது என்பதும் நிதர்சனம்.
இந்த தொகுப்பு நூல் உருவான விதம் குறித்தும் பொதுவாக சாதிகள் குறித்தும் பேசும் பெருமாள் முருகனின் முன்னுரை முக்கியமானது. இந்த முன்னுரை  அவரது தளத்திலும்  காணக் கிடைக்கிறது.
சாதிகள் குறித்து பேசும்போது அநேகமாக பார்ப்பனர்கள் குறித்தே பேசாத, அதிகமும் இடைநிலைச்சாதிகளையும், பார்ப்பனரல்லாத மேல்சாதிகளையுமே ஆதிக்கச் சாதிகளாக  அடையாளப்படுத்தும் இந்த நூல், சாதியம் பார்ப்பனச் சதி என்றும் பார்ப்பன ஆதிக்கம் மறைந்தால் சாதி பேதங்கள் மறைந்துவிடும் என்றுமே நம்பி, தன் வாழ்நாள் முழுவதும் பரப்புரை செய்து வந்த பெரியாருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டிருப்பது, ஒரு அழகிய  முரண்.
சாதியும் நானும், அனுபவக் கட்டுரைகள், by perumaal murugan.

நன்றி 
வெ.சுரேஷ்

இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/sathiyum-nanum.htm
தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment