Wednesday 26 November 2014

எஸ்.ராமககிருஷ்ணனின் காந்தியோடு பேசுவேன்

எஸ்.ராமககிருஷ்ணனின் காந்தியோடு பேசுவேன்

 'சொல் ஆளுமை' என்பதை நண்பர்கள் பேசுகையில் சில நேரம் கட்டுண்டு கேட்டுக் கொண்டிருந்த சமயங்களில் உணர்ந்ததுண்டு. இன்னும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டே இருக்க மாட்டார்களா என்ற எண்ணிய தருணங்கள் அவை. நேரில் பாவனைகளுடன் நம்மை ஈர்ப்பது கடினமான பணியென்றால் சிறுகதைகளின் வாயிலாய் நம்மை கட்டிப்போட்டு இடம், காலம் இவற்றையெல்லாம் மறந்து நம்மை கதைகளினூடே பயணிக்க செய்யும் எஸ்.ரா வின் ஆளுமையை இந்த சிறுகதை தொகுப்பின் முதல் கதையான "காந்தியோடு பேசுவேன்" எனும் கதையிலிருந்தே உணர முடிந்தது.

              பால்ய வயதிலேயே ஒரு 'முரட்டு' கணவனுடன் திருமணமான ஒரு பெண், பெரும்பாலும் தனிமையிலியே காலத்தை கடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு ஒரு சூழ்நிலையில் கைக்குழந்தையை கூட விட்டுவிட்டு காந்திஜியை காணக் கிளம்பிவிடுகிறாள். அவளுடைய உணர்வை புரிந்து கொள்ள முயற்சிக்கும் அவள் பிள்ளை கதை சொல்வதாக பின்னப்பட்டிருக்கும் உணர்வுப் பூர்வமான பதிவு இது. காந்தியைப் பின்புலமாக கொண்ட கதைகள் எல்லாவற்றிலும் இது தனித்தே நிற்கிறது.

              'கடக்க முடியாத பாலம்என்னும் சிறுகதை சாதி, மதத்தின் பெயரால் வன்முறை விளைவிப்போரை சாடும் கதை. கதை சொல்ல எடுத்தாண்ட சொற்கள்  ஒவ்வொன்றும் காட்சிகளை நம் கண்முன் நிறுத்துகிறது. ஒரு கட்டத்தில் படிப்பதை மறந்து நாம் பாத்திரமாகவே மாறி வன்முறையாளர்களின் வெறிச்செயலுக்கு பலியாவது நாம்தான் என்ற மாயபிம்பத்தை தோற்றுவிப்பதே எழுத்தாளரின் தேர்ந்த எழுத்துக்கு சாட்சி. இந்த தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை'பாதியில் முடிந்த படம்' . நிருபமா என்ற பெண்ணை திரைப்பட விழா ஒன்றில்  சந்திக்கும் ஒரு பத்திரிக்கையாளன், அவளுடன் நட்பாகி பின் அவளிடம் தன் மனதை தவணை முறையில் கொடுத்துவிட்டு தவிக்கும் தவிப்பை கதையின் கடைசி வாக்கியங்கள் அழகாய் எடுத்தியம்பும்,

           எழுத்தாளர் 'லியோ டால்ஸ்டாய்' அவர்களின் வாழ்க்கை சம்பவம் ஒன்றை சுவைபட சொல்லியிருக்கும் கதை 'அஸ்தபோவில் இருவர்'. முதுமையில் தன் காதல் மனைவி சோபியாவிடம் சொல்லாமல் வீட்டை விட்டு புறப்படும் டால்ஸ்டாய் அதற்கான காரணங்களையும், பின் குடியானவன் ஒருவனின் பேச்சில் தன் தவறை உணர்ந்த போதும் தான் இறக்கும் வரை தன் மனைவியிடம் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளாமலே போகுமிடத்தில் மனம் கொஞ்சம் நெகிழ்ந்துதான் போகிறது.

              'அருவிக்கு தெரியும்', 'பிடாரனின் மகள்', 'ஷெர்லி அப்படித்தான்' 'இடைப்பட்ட நாட்கள்' ஆகிய கதைகள் ஆங்காங்கே ரசிக்க வைக்கிறது.'நிகழ்காலத்தின் சுவர்கள்என்ன நடக்கப்போகிறதோ என்ற பதைபதைப்பை மூன்று பக்கங்கள் முடியும் வரை நீட்டிச் செல்கிறது. 'பசித்தவன்என்ற கதையில் திடியனின் வாழ்கையோடு நம்மை ஒன்றச் செய்துவிடுகிறார் ஆசிரியர். 'ஒற்றை முள்' எனும் கதையில் கண்டிப்பான தந்தையை வெறுக்கும் தனயன் கடைசியில் தன் தந்தையின் நேசத்தை உணரும் கதையில் அந்த உடைந்த இசைத்தட்டுக்கு பின்னால் இருக்கும் இரகசியத்தை படிக்கும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள நினைக்கும்படி சுவாரஸ்யமாய் சொல்லியிருப்பது அருமை.


               எஸ்.ரா அவர்களின் சிறுகதைகள் பல வாசித்திருக்கிறேன் என்ற போதும் அவருடைய நாவல்கள் இதுவரை வாசித்ததே இல்லை. இந்த 'காந்தியோடு பேசுவேன்' என்ற தொகுப்பை படித்தவுடன் உடனே அவருடைய நாவல் ஏதாவது ஒன்றை படித்துவிட வேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது. வாசகர்கூட நண்பர்களிடம் என்ன இருக்கிறது என்று பார்த்து உடனே ஆரம்பிக்க வேண்டும்.

நன்றி.
வாசகர்கூடம்



 இணையத்தில் ஆர்டர் செய்ய

http://www.udumalai.com/gandiyodu-pasuven-s-ramakrishnan.htm


 தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment